மாவட்ட அளவிலான கால்நடைகளுக்கான நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் & சர்வதேச யோகா தினம்



             தூத்துக்குடி ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையம் மற்றும் தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து கால்நடை வளர்போருக்கு மாவட்ட அளவிலான நோய்தடுப்பு விழிப்புணர்வு முகாம் வாகைக்குளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தில் நடத்தப்பட்டது. இம்முகாமில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 80கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டனர்.

             இந்நிகழ்ச்சியில் கால்நடை உதவி இயக்குநர் மரு.சந்தோசம் முத்துக்குமார் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை வரவேற்று பேசினார். அடுத்ததாக கோவில்பட்டி கோட்டம் கால்நடை உதவி இயக்குநர் மரு. வ.ஷங்கரநாராயணன், பிரதம மருத்துவர் எஸ்.பூதலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு மரு.பிரேமா, மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புதுறை, தூத்துக்குடி, அவர்கள் தலைமை ஏற்று உரை ஆற்றினார்கள். அடுத்ததாக பேசிய கால்நடை உதவி இயக்குநர் மரு. ஜெயாகிறிஸ்டி கால்நடை பாதுகாப்புத் துறையில் உள்ள நலத்திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்

             மேலும் கால்நடை பராமரிப்பு சம்மந்தமான பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை அளிக்கப்பட்டது. கால்நடைகளுக்கு ஏற்படும் முக்கியமான தொற்று நோய்கள் மற்றும் அதனை தடுக்கும் முறைகள் குறித்து மரு. ஜோசப்ராஜ் எடுத்துரைத்தார். இதனை தொடர்ந்து பேசிய வேளாண் அறிவியல் மையத்தின் முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர் மரு. சீனிவாசன் விஞ்ஞான முறையில் கால்நடை வளர்ப்பு பற்றி விளக்கி கூறினார். அடுத்ததாக பறவைக் காய்ச்சல் விழிப்புணர்வு பற்றி மரு. கருப்பசாமி மற்றும் பால்சுரப்பிற்கு ஆக்சிடோசின் தடை பற்றிய உரையை மரு. மு. அபிராமி வழங்கினார்.

              இறுதியாக விவசாயிகள் மற்றும் வல்லுனர் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் சினை பிடியா மாடுகள் சிறப்பு சிகிச்சை, இளம் கால்நடைகளில் ஏற்படும் இறப்பை தடுத்தல் முறைகள், கறவை மாட்டினை தாக்கும் மடிநோய்க்கு கற்றாழை பயன்படுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தல், பசுற்தீவனத்தை 35 முதல் 45 நாள் பருவத்தில் அறுவடை செய்வதன் மூலம் அதிக புரதம் மற்றும் செரிமான சத்துகள் கிடைக்கும் என விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

              முன்னதாக தேசிய அளவிலான யோகா பயிற்சியில் பங்கேற்று,வாகைக்குளம் அன்னை தெரசா பொறியியல் கல்லூரியின்  இரண்டாம் ஆண்டு மாணவி அனு நாயர் தேசிய அளவிலான யோகா பயிற்சியில் பங்கேற்று பரிசு பெற்றவர் விவசாயிகளுக்கு யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து எளிமையான சில ஆசன முறைகளையும் செயல் விளக்கமாக செய்து காண்பித்து அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சொல்லி கொடுத்து அவர்களின் சந்தேகங்களுக்கும் பதில் கூறி சர்வதேச யோகா தினம் சிறப்பாக  நடைபெற உறுதுணையாக இருந்தார்கள்.