விவசாயிகளுக்கு கண்டுணர் சுற்றுலா



தூத்துக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இயங்கும் வான்மழை,கதிரொளி மற்றும் பெருந்தலைவர் ஆகிய மூன்று உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சார்ந்த விவசாயிகளுக்கு கண்டுணர் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.

            விவசாயிகள் முதலாவதாக,  மதுரையில் அமைந்துள்ள Green Crafts Foundation என்ற நிறுவனத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு விவசாயிகள் வாழை மட்டையிலிருந்து பல்வேறு கைவினை பொருட்களை தயாரிக்கும் முறைகளை கண்டறிந்தனர். இந்த பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இந்நிறுவனத்திற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் நேரடியாக வாழை மட்டைகளை விற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

            அடுத்தாக விவசாயிகள் அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு வேளாண் அறிவியல் மையத்தின் பணிகள் மற்றும் அந்த பகுதி விவாசாயிகள் கடைபிடிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பல்வேறு செயல் நிலை விளக்க திடல்களை கண்டறிந்தனர்.

            இறுதியாக விவசாயிகள் ரமணர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அது தமிழகத்தில் இயங்ககூடிய முன்னோடி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் ஒன்றாகும். இங்கு ரமணர் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் முதன்மை அலுவலர்கள் அந்த நிறுவனத்தை ஆரம்பித்தல் முதல் சந்தித்த பல்வேறு இடர்பாடுகளையும் அவற்றை எதிர்கொண்ட முறைகள் பற்றியும் விளக்கி கூறினர். மேலும் அந்நிறுவனத்தின் வியாபார முறைகள்  பற்றியும் எடுத்துரைத்தனர். மூன்று   உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சார்ந்த இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்தனர்.