ஜெ.ஜெ ஆர்கானிக் பண்ணையில் கள ஆய்வு



வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள் கூட்டாக, கட்டாலங்குளத்தில் உள்ள ஜெ ஜெ ஆர்கானிக் பண்ணைக்கு சென்று களஆய்வு செய்தனர். இந்த பண்ணையானது ஒருங்கிணைந்த பண்ணையமுறையில் கட்டமைக்கப்பட்டது. இதில் பழந்தோட்டங்கள், வேளாண்காடுகள், தேனீவளர்ப்பு, கால்நடைவளர்ப்பு, கோழிவளர்ப்பு, அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு கூடம் மற்றும் பண்ணைகழிவுகளை மக்கவைக்கும் கூடம் என 50 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. இப்பண்ணையில் உற்பத்தி திறனை பெருக்கும் விதமாக, பல்வேறு ஆலோசனைகளை வழங்குவதற்காக  இந்த கள ஆய்வு நடத்தப்பட்டது. திரு. ஜெயராயன் அவர்கள் அங்கக வேளாண்மை முறைகளை கடைப்பிடித்து வருகிறார்.

முதலாவதாக, வாழை தோட்டத்தை ஆய்வு செய்தபோது, வாழை குலையின் எடையை அதிகரிக்க பக்கக்கன்றுகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் அவர் அதிக செலவு கொண்ட கழிவுகளை மக்கவைக்கும் தொழில்நுட்பத்தை கடைபிடிக்கிறார். கழிவுகளை மக்கவைப்பதில் உள்ள செலவுகுறைந்த தொழில்நுட்பங்கள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.

அடுத்ததாக உள்ள பழத் தோட்டங்களை ஆய்வு செய்யும் போது, தேன்கூட்டில் மெழுகுபூச்சியின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான மேலாண்மை முறைகளும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பண்ணை வேலையாட்களுக்கு பாதுகாப்பாக தேன்கூட்டை கையாளும் முறைகள் பற்றி செய்முறை பயிற்சியளிக்கப்பட்டது. கொய்யாதோட்டத்தை ஆய்வு செய்யும் போது, கொய்யா நடவு செய்தலிருந்து கவாத்து செய்யாமல் இருந்தது கண்டறியப்பட்டது. லக்னோ 49 ரககன்றுக்கு அதிக தேவை இருப்பதை கருத்தில் கொண்டு, ஏர்லாயரிங் மூலம் கன்று உற்பத்தி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் அதற்கான தொழில்நுட்ப உதவிகளை வேளாண்அறிவியல்மையம் வழங்குவதாக உறுதி அளித்தனர்.

அடுத்ததாக விஞ்ஞானிகள் கால்நடை தொழுவத்திருக்கு சென்று கால்நடைகளுக்கான சரிவிகித தீவன அளவு குறித்து எடுத்துரைத்தனர். இங்கிருந்து கழிவுகள் அனைத்தும் பைப்புகள் மூலமாக அங்கக இடுபொருட்கள் தயாரிக்கும் கூடத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. அருகில் இருந்த கோழிபண்ணை குறைந்த அளவிலான எண்ணிக்கையை கொண்டிருந்தது.  மேற்கொண்டு அதிக கோழிகளை வாங்காமல், இதனை கொண்டே கோழிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டது. இதனை அடுத்து கோழிக் குஞ்சுகள் இறையாவதை தடுக்க, வலை அமைப்பை ஏற்படுத்தவும்  அறிவுறுத்தப்பட்டது.

இறுதியாக மண்புழு உர தயாரிப்பு கூடத்தை பார்வையிட்டு மண்புழு விற்பணைக்கு அதிக தேவையுள்ளதால் அதை செயல்படுத்துமாறு அறிவுறுத்தினார்

திரு. ஜெயராயன் அவர்கள் உற்பத்தியை பெருக்க நல்ல வாய்ப்புள்ள 50 ஏக்கர் பண்ணையில் மிக குறைந்த அளவிலேயே மகசூல் எடுக்கிறார். இதனை அதிகப்படுத்த பல்வேறு வழிமுறைகள் வழங்கப்பட்டது.